அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விடாமல் சதி நடந்தது. தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள். அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எம்.ஜிஆர் எப்போதாவது எடப்பாடி நேரில் பார்த்து பேசியது உண்டா ?பொதுக்குழுவில் என்னை கண்டுகொள்ளாமல் சென்றார். தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள்.அதிமுக வங்கி கணக்கில் ரூ256 கோடி உள்ளது. கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடியை என்னிடம் வாங்கிய ஜெயலலிதா அதை திருப்பி கொடுத்தார். அந்த பணம் எல்லாம் தொண்டர்களுடைய உழைப்பு. அவர்கள் தந்த சந்தா பணம் தான் கட்சியை நடத்த உதவுகிறது. டெபாசிட்டில் இருந்து வரும் வட்டியில் தான் கட்சி நடக்கிறது. வங்கி யில் உள்ள கட்சி நிதியை முறைப்படி செலவு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு தடை நீக்க காரணம் பிரதமர் மோடி தான். என்னைப்பற்றி சிலர் சசிகலாவிடம் தவறான தகவல்களை சொல்லி உள்ளனர். தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக ஐந்தரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. ஒரே ஒரு தொகுதி தேனியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் சிலர் தடுத்து நிறுத்தினர்.
ஜெயலலிதா என்னை பதவியை விட்டு நீ க்கவோ, இறக்கவோ செய்யவில்லை.ஆட்சியில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத்தயார். இப்போது நடக்கும் தர்ம யுத்தத்தில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம். இந்த 4 வருடத்தில் நான் ஏமாற்றப்பட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நாளை இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்குகிறவன் ஒருதொண்டனாகத்தான் இருப்பான். உட்கட்சி தேர்தல் நடந்தால் நீங்கள் தான் பொறுப்பாளர்களாக ஆவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.