ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்-அமைச்சராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்டோருக்கு எதிராக 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழங்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில்ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனை ஏற்று வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் மறுஆய்வுக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றஉத்தரவை ரத்து செய்தார். வழக்கை மீண்டும் விசாரிக்கவும், மதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு அதன் விசாரணையை மாற்றியும் ஆணையிட்டார்.
இந்த வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தை சென்னை ஐகோர்ட்டு எடுத்துக்கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்று கூறி, இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.