அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்துள்ளன. இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் அவர் வசம் உள்ளனர்.
ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான சண்முகத்தில் தொடங்கி வைரமுத்து, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் என 6 பேர் வரை வழக்கு போட்டனர். இந்த வழக்குகள் எல்லாம் பல்வேறு கால கட்டங்களில் 10 முறைக்கு மேல் கீழ்கோர்ட்டு முதல் மேல் கோர்ட்டு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிரான கடைசி வாய்ப்பாக ஓ.பி.எஸ்.சுக்கு இருப்பது ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமேயாகும்.அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில் கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது; கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது; உட்சபட்ச அதிகாரம் பெற்றது பொதுக்குழுதான். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார்.