ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. தற்போது இடைத்தேர்தலில் அதிமுக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமாகா விட்டுக்கொடுத்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என கூறியுள்ளதாலும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக காத்திருப்பதால் இரட்டை இலை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வேட்பாளர் குறித்து இன்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், ராமலிங்கம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட ரகசிய கூட்டம் நடத்தினார். எடப்பாடி தரப்பினர் இன்று வேட்பாளரை அறிவிக்கலாம் என கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் தனது பங்கிற்கு வேட்பாளரை தேர்வு செய்து இருப்பதாகவும் எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவித்து சில நிமிடங்களில் தனது அணி வேட்பாளராக பெங்களூர் புகழேந்தியை அவர் ஈரோடு கிழக்க இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்…