அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கோர்ட்டுகளுக்கு சென்று வரும் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதனிடையே அதிமுகவில் எனக்கு தான் தொண்டர்களின் பலம் என கூறி வரும் ஓபிஎஸ் இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா என முப்பெரும் விழாவை நடத்துகிறார். முதலில் எங்கள் அணி சார்பில் லட்சகணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் மாநாடு என அறிவித்த ஓபிஎஸ் திடீரென அதனை மாற்றி முப்பெரும் விழா என அறிவித்தார். மேலும் தனது மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் கலந்து கொள்வார்கள் என கூறினார். ஆனால் அந்த அறிவிப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் நடத்தும் இந்த முப்பெரும் விழாவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி முப்பெரும் விழா அழைப்பிதழை கொடுக்க சசிகலாவிடம் ஓபிஎஸ் தரப்பினர் நேரம் கேட்டதாகவும் அதற்கு சசிகலா நோ சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. காரணம் அதிமுகவில் உள்ள இந்த குழப்பத்திற்கு அடிப்படை காரணம் ஓபிஎஸ் தான் என சசிகலா கடும் கோபத்தில் இருப்பதாகவும் எனவே அவர் நோ சொல்லி விட்டதாகவும் இதனால் அப்செட் ஆன ஓபிஎஸ் தரப்பு டிடிவியை அழைக்கும் முயற்சியை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.