ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம் தங்கள் தரப்புக்கு பாஜக, அதிமுக அங்கீகாரம் தந்துவிட்டதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் தற்போது குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிஜேபி ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கான பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்கு ஓபிஎஸ்-க்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க இன்று சென்னையில் இருந்து விமானத்தில் ஓபிஎஸ் புறப்படுகிறார். ஈபிஎஸ்-க்கு தரப்படும் முக்கியத்துவம் ஓபிஎஸ்-க்கும் தரப்படுவதால் பாஜக ஆதரவு யாருக்கு என்று தெரியாமல் இரு தரப்பு அணிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.