மக்களவை தேர்தல் வரும் 2024 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது.
மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் இன்று (23-ந்தேதி) கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் முன்னால் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் விமானம் மூலம் பாட்னா வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே பாட்னா வந்து விட்டார். இதுபோல சரத்பவார், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஜார்கண்ட் முதல்வர் சோரன், உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா ஆகியோரும் பாட்னா வந்துள்ளனர். 6 மாநில முதல்வர்கள் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இதனால் பாட்னா அரசியல் அரங்கில் இன்று பரபரப்புடன் பார்க்கப்படுகிறது.