Skip to content
Home » கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. படங்கள்..

கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. படங்கள்..

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று மோகினி அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு மாலை 4.30 மணி வரை எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசியான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா…கோவிந்தா..ரங்கா …. ரங்கா… என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார். இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!