Skip to content

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று (24.02.2025) திறந்து வைத்தார். செந்துறையில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டார்.

முதல்வர் மருந்தகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மருந்தகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் குத்து விளக்கேற்றி வைத்து, முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின சிறப்புரையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர்கள் மூலம் அரசின் மானிய வசதி மற்றும் கடனுதவியோடு தொடங்கப்படும் என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக

இன்றையதினம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர்கள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் என தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை” காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் திருமழபாடி, கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சி, செந்துறை, இடைக்கட்டு, இலையூர், தென்னூர், அனைக்குடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம்; 09 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர்கள் மூலம் 09 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1 இலட்சமும், தொழில் முனைவோர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சமும் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அரசு மானியமாக கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலும், தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பிலும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சித்தா, யுனானி மற்றும் இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் மற்றும் OTC Products ஆகிய அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கப்படும். பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சந்தையில் உள்ள மருந்துகளை விட குறைவான விலையிலும், முதல்வர் மருந்தகங்கள் மூலம் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் மருந்துகள் விற்பனை செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முதல்வர் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) செல்வி.சாய் நந்தினி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் சரக துணைப்பதிவாளர் மீர் அஹசன் முசபர் இம்தியாஸ், இதர அரசு அலுவலர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!