நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக செயல்பட்டு வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்ச புகாரில் சிக்கினார். கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா சென்ற காரில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத 12 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஜஹாங்கீர் பாஷா கடந்த மாதம் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.