தமிழகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வான நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு எண்ணிடப்படாததால் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், இந்த மனுவை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமர்வு மறு ஆய்வு மனு செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும், உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும், வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.