நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும் உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, உதகையில் உள்ள அசெம்பளி ரூம்ஸ் திரையரங்கில் இன்று (டிச.27) தொடங்கியது.
விழாவை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முறை 45 நாடுகளை சேர்ந்த இயக்குநர்களின் 120 குறும்படங்கள் திரையிடப்படடுள்ளது. வரும் 29-ம் தேதி வரை அசெம்பளி ரூம்சில் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான தங்க யானை மற்றும் பசுமை யானை விருதுகள், இவ்விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை பார்வையாளர்கள் இலவசமாக காணலாம், என்றனர்.