நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஜஹாங்கீர் பாஷா (53) நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரிமிளா தேவி மற்றும் போலீசார் ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா வந்த காரை சோதனையிட்டனர். அதில், 11.70 லட்ச ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின், கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக இரவு, 8:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் கைது செய்யப்படுகிறார்.