ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி அரசு சுகாதாரத்துறை மூலம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அப்போது 8ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி போட்டு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. இந்த போட்டியில் அதிக மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 40 மாத்திரை சாப்பிட்டு உடல் நிலை மிகவும் மோசமான மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உருது பள்ளி எச்.எம் முகமது அமீன், ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
