Skip to content

ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்…. விஜய் கட்சி குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி

  • by Authour

நடிகர் எஸ் வி சேகர்   நேற்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   முன்னதாக அவர்  நிருபர்களிடம் கூறியதாவது:

அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்து விட்டால், அதன் பின் பெரிய எதிர்காலம் இருக்கும். முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்று விட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகி விடும். அவர் விரும்பியதை தமிழக அரசியலில் செய்ய முடியுமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும். அவருக்கான ரசிகர் மன்ற கட்டமைப்பு பலம். அதை எப்படி அரசியல் கட்டமைப்பாக மாற்றப் போகிறார் என்று தான் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் எடுக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., பெரிய கட்சியில் இருந்து ,அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்து போது, மக்கள் பெரிதாக ஏற்று கொண்டு மாபெரும் கட்சியானது. ஒரு எம்.ஜி.ஆர்., தான் இருக்க முடியும்.

லோக்சபா தேர்தலில், பா.ஜ.க கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 3வது முறையாக மோடி பிரதமராவார்.லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்யமாகத்தான் இருக்கும். அவருடைய நடைபயணம் கேலிக்குரியதாக உள்ளது. குழந்தைத் தனமான அரசியல்வாதியான அண்ணாமலைக்கு கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்யம் தான். அதன் ‘ரிசல்ட்’ மே மாதத்தில் தெரியும்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இருக்கக் கூடாது, என்று தான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறி விட்டது. அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்து விடும். பா.ஜ.கவின் 3 சதவீதம் ஓட்டு வளர்ச்சி மே மாதம் தான் தெரியும். அண்ணாமலை பா.ஜ.,வுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன்.

மோடி அரசின் திட்டங்களை, மக்களிடம் அண்ணாமலை சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன ரூட்டு தவறாகி விட்டது.அவர் நடை பயணம் செல்வதால், வரும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறாது… என்னை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்று நினைத்தால், எனக்கு ஏதோ வேறு கோளாறு என்று அர்த்தம்.

சென்னை மயிலாப்பூரில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த போது, ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல், 300 கோடி ரூபாய்க்கு வேலை செய்துள்ளேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

தினசரி வாழ்வாதாரத்துக்காக போராடும் பிராமணர்கள், 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான சமூக நீதி கிடைக்காவிட்டால், அவர்கள் வாக்கை நோட்டாவுக்கு போட்டு விடுவார்கள்.

மோடியின் புகழை உயர்த்த பாடுபடாமல், அண்ணாமலை தன் புகழை உயர்த்திக் கொள்ள பாடுபடுவதால், எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தேர்தலில் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.   பின்னர் அவர் நாகூர் புறப்பட்டு சென்றார். நாகையிலும் எஸ்.வி. சேகர் பேட்டி அளி்த்தார். அங்கு அவர் கூறியதாவது:

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை பலமாக வைத்திருக்கிறார் அதற்கு காரணம் அவருடைய தந்தை சந்திரசேகர். அந்த கட்டமைப்பை அரசியல் கட்டமைப்பான மாற்றுவார் என்று நம்புகிறேன். அண்ணாமலை ஒரு போலீஸ் திருடர்களோடு பழகி பொய் சொல்ல கற்றுக்கொண்டார். தேர்தல் என்பது கூட்டணி பலம். அரசியல் அனுபவமே இல்லாத கத்துக்குட்டிதான் அண்ணாமலை.

தற்போது அதிமுக  பலவீனமாக இருந்தாலும் அதனை சரி செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலை வந்தது முதலே அதிமுக கூட்டணி  முறிவு ஏற்பட உள்நோக்கத்தோடு முடிவு செய்தார். கொங்கு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமியைவிட தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அண்ணாமலை எண்ணம். அவர் எண்ணத்தில் மண்விழும் அதற்காகத்தான் என் மண் என்று பெயர் வைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் நிலை. வேறு இந்தியா முழுவதும் ராமர்கோவில் விவகாரம் பாஜகவிற்கு கைகொடுக்கும்.  ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற பூத் கமிட்டி முக்கியம். 70 ஆயிரம் பூத் கமிட்டி இருக்க வேண்டிய நிலையில் 10 ஆயிரம் பூத் கமிட்டிகூட இல்லாத ஒரு பலவீனமான நிலையில் தமிழக பாஜகவை அண்ணாமலை வைத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!