நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு செய்து விளையாட துவங்கினார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது. அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் நாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது. அதிலும் சிவன்ராஜ் தான் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மனமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் கூல்டிரிங்ஸ் கலந்து குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
