கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த சொந்தமாக பிசினஸ் செய்து வந்த 32 வயது வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை நம்பிய வாலிபர் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணைய அவருக்கு ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்க பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பத்தை காண்பித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப் குரூப்பில் பேசிய மர்ம நபர் தினமும் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய தொகை முதலீடு செய்ததில் அந்த கும்பகோணம் வாலிபருக்கு லாபம் கிடைத்துள்ளது. இதனால் மர்மநபர் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 24.60 லட்சம் அனுப்பினார். அதற்கு பின்னர் அந்த வாலிபரால் லாபம் எடுக்க இயலவில்லை. பணம் பறிபோனதே தவிர, எந்தவிதத் தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.