தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்படி, அய்யம்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அய்யம்பேட்டை தைக்கால் தெருவில்
உள்ள ஒரு வீட்டில் ரங்கநாயுடு மகன் சேதுராமன் (50) மற்றும் கலியபெருமாள் மகன் அறிவழகன் (44) ஆகிய இருவரும் ரகசியமாக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இவர்களை இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில், எஸ்ஐ ராஜேஷ்குமார், எஸ்எஸ்ஐ முருகதாஸ் மற்றும் காவலர் சிவா ஆகியோர் அடங்கிய போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் ஆறு செல்போன்கள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.