அரியலூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 46,250/- ரூபாய் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து எதிரிகளை கைது செய்ய வேண்டி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜ் (இணைய குற்றப்பிரிவு- பொறுப்பு) அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவனேசன் (தொழில்நுட்பம்), காவலர்கள் சுரேஷ் பாபு, சுதாகர் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இவ்வழக்கின் எதிரிகளின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. மேலும் டெல்லியில் இருந்தபடியே ஏ.டி.எம் மூலம் ஏமாற்றி பெற்ற பணத்தை எடுத்து எதிரிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் எதிரிகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் எதிரிகள் சிலர் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பட்டி என்ற பகுதியில் வந்து தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆய்வாளர் தலைமையிலான சிறப்பு குழு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் சென்று,
இணைய குற்ற மோசடியில் ஈடுபட்ட 1.உஷா(34),க/பெ.மூர்த்தி, 2.மூர்த்தி(39) த/பெ.ராமன் 3.செங்கோடன் (58) த/பெ. நல்லமுத்து ஆகிய மூன்று எதிரிகளை கைது செய்து, அவர்களிடம் விசாரணை செய்ததில் இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் சிலர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
மடிக்கணினி -01, செல்போன்கள் -04,
ஏ.டி.எம் கார்டுகள்-13, வங்கி கணக்குப் புத்தகம்-01 மற்றும் 35,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்படி எதிரிகள் விசாரணைக்கு பின் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.