திருச்சி, பிராட்டியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. குறைவான வகுப்பறையில் மாணவர்களின் வருகை பதிவு அதிகமாக இருந்ததால் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிராட்டியூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கபடி போட்டி நேற்று முன்தினம் இரவு நடத்தினர். பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு இடைவிடாது மழை பெய்ததால் கபடி போட்டிக்கு வந்திருந்த 30க்கும் மேற்பட்ட அணியினர் புதிய பள்ளி கட்டடத்தில் தங்கினர். நேற்று காலை கட்டட மேஸ்திரி பள்ளி கட்டடத்திற்கு வந்து பார்த்த போது பூட்டியிருந்த ஒரு வகுப்பறை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது புதிய வகுப்பறையில் இருந்த எலக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கபடி போட்டிக்கு வந்து பள்ளி கட்டடத்தில் தங்கிய கபடி வீரர்கள் திருடினார்களா? அல்லது வேறு யாரும் திருடினார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் பிராட்டியூர் கணபதி நகரில் பாஜ தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் சிட்டி பாபு நடத்தி வரும் 3டி போட்டோ பிரிண்டிங் நிறுவனத்தின் பூட்டை கடந்த 20ம் தேதி உடைத்து அங்குள்ள 5 கம்ப்யூட்டரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஹார்டு டிஸ்க், ரேம்ப், சாப்ட்வேர், பெண்டிரைவ், கேமரா டிஆர் ஆகியவற்றை திருடி சென்று உள்ளனர். இது குறித்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் பிராட்டியூர் பகுதியில் தொடர்ந்து எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு போவது செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு சவால் விடும் வகையில் அமைந்திருப்பதால் போலீசார் திக்கு முக்காடி உள்ளனர். மேலும் இது போன்ற திருட்டு நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.