சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
தேசிய ஒருமைப்பாடு தினத்தை ஒருபுறமும், தீபாவளி பண்டிகையை மறுபுறமும் கொண்டாடி வருகின்றோம். உண்மையான இந்தியர்களாக, தேசிய ஒற்றுமைக்கான ஒவ்வொரு முயற்சியையும் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் கொண்டாடுவது நமது கடமை. இந்தியாவின் மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம், ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துகிறோம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒருங்கிணைத்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரே நாடு ஒரே மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்கியுள்ளோம். இன்று மதசார்பற்ற பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இன்று முழு நாடும் மகிழ்ச்சியடைந்துள்ளது.
இது சர்தார் வல்லபபாய் படேலுக்கு நான் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி. கடந்த 70 ஆண்டுகளாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரை உச்சரிப்பவர்கள், அதை மிகவும் அவமதித்துள்ளனர். காரணம் ஜம்மு – காஷ்மீர் சட்டப்பிரிவு 370. அந்தச் சட்டம் நிரந்தரமாக புதைக்கப்பட்டுவிட்டது. முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இந்த காட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மனநிறைவை அளித்திக்கும். இதுவே நமது அஞ்சலி” என்றார்.