தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பொங்கல் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இருப்பினும் பலரும் ஹெல்மெட் இன்றி பயணித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும், சீட்பெல்ட் அணிந்து காரில் பயணிக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரில் இன்று திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
