சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர்…. சார் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று தகவல் கொடுத்ததின் பேரில் சுறுசுறுப்பான போலீசார், பதறி அடித்துக்கொண்டு அங்கு சென்றுள்ளனர். தலைவாசல் சார்வாய்புதுார் சாமியார் கிணறு பகுதியில் விவசாயி லோகநாதன்(45) என்பவர் வீட்டு சென்று போலீசார் நடத்திய விசாரணையில்….. அவர் தனது மனைவி ரேவதி, மகளுடன் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பின்புறம் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் பணம், நகை கொள்ளை போனதாக அவர் கூறி உள்ளார். மோப்பநாய், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது. இருப்பினும் விவசாயி வீட்டில் ஒரு கோடி பணம் என்பது போலீசாருக்கு நெருடலை ஏற்படுத்தியது. தொடர்ந்து தங்களது பாணியில் போலீசார் விசாரணை செய்த போது லோகநாதன் வெலவெலத்து உண்மையை கக்கி உள்ளார். ரியல் எஸ்டேட் அதிபரான கணேசன்(60) என்பவர் லோகநாதனிடம் 2 கோடி ரூபாய் ரொக்கத்தை கொடுத்து பாதுகாப்பாக
வைத்திருக்கும்படி கூறியுள்ளார். பணத்தை வாங்கிய லோகநாதன் அதில் ரூ.1 கோடியை எடுத்து வீட்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் புதைத்து வைத்துவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது போல நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். போலீஸார் விசாரணையில் உண்மை வெளியானதை அடுத்து லோகநாதன் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவர் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.