33-வது ஒலிம்பிக் திருவிழா உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை நடத்த பாரிஸ் நகரம் தயாராகி விட்டது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் வழக்கமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் பாரிஸில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதிக அளவில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களை கவரும் வகையில் தற்காலிக மைதானங்கள் பாரிஸ் நகரின் முக்கிய அடையாள சின்னங்களான ஈபிள் டவர், கிரான்ட் பேலஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்த உடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா ஒரு விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற உள்ளது. பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான செய்ன் நதியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தி படகில் 6 கி.மீ தூரம் அணிவகுத்து வர உள்ளனர். இதன் பின்னர் தொடக்க விழாவின் இறுதி நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பாரம்பரிய மிக்க நகரமான பாரிஸ் தனது தனித்துவத்தை இழக்காமல் விளையாட்டு உலகின் உச்சமாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.