கரூரில் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட் வணிக வளாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த கட்டுமான பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். இதற்காக கரூர் வந்த அமைச்சருக்கு திமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்ற்றனர்.அமைச்சருடன் கலெக்டர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்ற முதியவர் ஒருவர் தனது மகளின் கல்விக்காக உதவி கேட்டு அமைச்சரிடம் மனு கொடுத்தார். அப்போது அவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து உதவி
செய்யும்படி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். தான் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், ஏற்கனவே ஆபரேசன் செய்யப்பட்டுள்ளதாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை , மகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்.
முதியவர் ஒருவர் காலில் விழுந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த முதியவரை தூக்கி விட்டு, உங்கள் மகளின் கல்விக்கான உதவிகைளை செய்கிறேன் . அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறேன் என முதியவா் ஜெயராமனிடம் உறுதி அளித்தார். அத்துடன் அவரது முகவரி, மகள் என்ன படிக்கிறார் என்பதை கேட்டார். அவற்றை குறித்துக்கொள்ளும்படி உதவியாளரிடம் கூறினார். கவலைப்படாதீர்கள் என முதியவரை தேற்றி அமைச்சர் அனுப்பி வைத்தார். அமைச்சரின் இந்த நம்பிக்கைான பதிலால் ஆறுதல் அடைந்த ஜெயராமன் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.