திருச்சி எம்.ஜி.ஆர். சிலையையொட்டி உள்ள பஸ் நிழல் குடை அருகே ஒரு உயர் அழுத்த மின்சார கோபுரம் உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் அந்த டவரில் ஒரு முதியவர் ஏறி நின்று கொண்டு கோஷம் போட்டார். 8 மணி வரை இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி நகரம் பரபரப்பான நிலையில் இயங்கி கொண்டிருந்தது. கல்வி நிலையங்களுக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் என பல்வேறு வாகனங்களிலும், நடந்தும் சென்று கொண்டிருந்தபோது செல்போன் டவரில் ஒரு கூச்சல்போட்டதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அவரது தோற்றத்தை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
7.30 மணி அளவில் அந்த இடத்திற்கு கண்டான்மெண்ட் போலீசார், தீயணைப்பு படையினர் வந்தனர். பொதுமக்களும் திரண்டு விட்டனர். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசாருக்கு டவரில் இருப்பரை கீழே பத்திரமாக இறக்குவதுடன், போக்குவரத்தையும் சீரமைக்க வேண்டிய இரண்டு வேலைகள் ஏற்பட்டது. அவற்றை போலீசார் சமாளித்து டவரில் இருந்தவரை இறக்கினர்.
விசாரணையில் அவரது பெயர் ராஜேந்திரன்(63) , உறையூர் என தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த மக்களவை தேர்தலில் திருச்சியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அங்கு இவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை கண்டித்து இன்று காலை திடீரென மின் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். என் வேட்புமனுவில் எந்த தவறும் இல்லை. ஏன் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர் என முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து கூட்டமும் கலைந்து விட்டது. ஆபத்தான மின் டவரில் ஏறி முதியவர் ரகளை செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.