கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன் பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு நல்ல பாம்பு இருந்திருக்கிறது. இதனைப் பார்த்த மூதாட்டி விசாலாட்சி விரைந்து வெளியே வர முடியாமல் தவித்து இருக்கின்றார். அவரின் குடும்பத்தார் இதனை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மூன்று மணி நேரம் தொடர்ந்து பதட்டத்திலும் பீதியிலும் உறைந்திருக்கின்றனர்.
முடிந்த பிறகு அக்கம் பக்கத்தினரிடம் கேட்டு, பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தந்திருக்கின்றனர். அப்பொழுது சம்பவ இடத்திற்குச் சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், வனத்துறை வழிகாட்டுதலின் அடிப்படையில், விஷமுடைய நல்ல பாம்பை லாவகமாக மீட்ட திட்டமிட்டார். அதன் அடிப்படையில் பாம்பு லாவகமாக மீட்டு பைக்குக்குள் அடைத்தார். மூன்று மணி நேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாம்புடன் பாத்ரூமுக்குள் இருந்த பாட்டி மூதாட்டி விசாலாட்சி மற்றும் அவர் குடும்பத்தார் பெருமூச்சு விட்டனர். பாத்ரூமில் பிடிபட்ட நல்ல பாம்பு அதன் வாழ்விடத்தில் விடப்பட்டது. பாம்புகளை பொதுமக்கள் பார்த்தால் அதனை அடிக்கவோ பிடிக்கவோ முற்படக் கூடாது என்றும், பாம்பு இருப்பது தெரிந்தால் உடனடியாக பாம்பு பிடிப்பதற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பாம்பு பிடி வீரர்கள் பொதுமக்களிடமிருந்து பாம்புகளையும் பாம்புகளிடமிருந்து பொதுமக்களையும் பத்திரமாக காப்பாற்றுவார்கள் என்றும் பாம்பு பிடி வீரர் மோகன் தெரிவித்திருக்கின்றார்.