பெரம்பலூர் அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா என்கிற மாணிக்கம்(75), இவரது மனைவி பார்வதி என்கிற மாக்காயி(70). இந்த தம்பதிக்கு 4 மகள்கள். 4 பேரையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். அவர்கள் வெளியூர்களில் வசிக்கிறார்கள்.
தற்போது மாணிக்கம், பார்வதி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதி இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இருவரது கழுத்திலும் சரமாரி வெட்டுக்காயங்கள் இருந்தது. வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. பார்வதி அணிந்திருந்த செயின், தோடு போன்ற நகைகள் அப்படியே இருந்தது. கொலை செய்யப்பட்ட சடலங்கள் மீது மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது. நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் இந்த கொலையை செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் வி களத்தூர் போலீசார் மற்றும் மாவட்ட எஸ் பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.