கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட் பழக்கடைகளில் ரசாயனம் மூலம் செயற்கையாக பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழ குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் செயற்கையாக பழுக்க வைப்பதற்காக ரசாயனம் கலந்த பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் கலந்து வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
ரசாயனம் வைக்கப்பட்டு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி பேதி போன்ற உபாதைகள் உண்டாகும். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற முறையற்ற விதத்தில் ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்தால் பாதுகாப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பழ வியாபாரிகளை எச்சரித்தனர்.