திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ்.(37) இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் ரமேஷ் என்பவர் துரைராஜ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு பெல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடம் வந்த பெல் போலீசார் துரைராஜின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த பொழுது வீட்டில் பீரோவில் இருந்த சாவியை வைத்து பீரோ திறக்கப்பட்டு சுமார் 5 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக பெல் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.