நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுதூரில் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை ஆவின் பால் நிலையத்தில் பணியை முடித்து வீட்டுக்கு புறப்பட்டார். இதற்காக அவர் ஆவின் பால் நிலையத்தில் இருந்து வெளியே வந்து தனது காரை எடுக்க கதவை திறந்தார். அப்போது காரின் ஓரத்தில் நாகப்பாம்பு ஒன்றும், சாரைப்பாம்பு ஒன்றும் பின்னி பிணைந்து கொண்டு இருந்தது.
இதை பார்த்த தட்சிணாமூர்த்தி அந்த பகுதியில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து பாம்பு இரண்டையும் விரட்ட முயன்றுள்ளார். இதில் சாரைப்பாம்பு அங்கிருந்து ஓடி விட்டது. அதேநேரத்தில் கோபமுற்ற நாகப்பாம்பு திடீரென படம் எடுத்தபடி தலையை தூக்கியது. இதைக்கண்டு தட்சிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அங்கு கிடந்த கல்லில் அவரது தலை மோதி அடிபட்டது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.