Skip to content
Home » ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி விபத்துக்குள்ளாயின. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சைலேஷ் குமார் பதக் தனது விசாரணையை நேற்று தொடங்கினார்.  இந்த சூழலில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ இன்று விசாரணையை தொடங்கி உள்ளது. கோரமண்டல் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரெயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *