Skip to content

ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

  • by Authour

 

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் கடந்த மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மத்திய அரசு அவரது ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கூத்தன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன், 2000-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஒடிசா ஆட்சிப்பணி அதிகாரியாக, 2002-ம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக மட்டுமின்றி அவரது வலது கரமாகவும் இருந்தார். ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார்.

இதனால் ஓய்வுக்கு பிறகு அவர் கேபினட் மந்திரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். அதாவது, மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ‘5டி’ திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்த பதவி, கேபினட் மந்திரிக்கு இணையான பதவி ஆகும். எனவே, அவர் விரைவில் ஒடிசா அரசியலில் நேரடியாக களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வி.கே.பாண்டியன் இன்று நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஒடிசாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  எனவே அந்த தேர்தலில்  பாண்டியனும் போட்டியிட்டு துணை முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் ஒடிசா அரசியலில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!