Skip to content
Home » ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் 208 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் 34 ரன்கள், சூரியகுமார் யாதவ் 31 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் பின் ஆலன் 40 ரன்கள் சேர்த்தார். அதேசமயம், முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 131 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன.

ஆனால் 7வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தனர். பிரேஸ்வெல் சதமும், சான்ட்னர் அரை சதமும் கடந்தனர். 7வது விக்கெட்டுக்கு 150க்கும் அதிகமான ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்த இந்த ஜோடி, களத்தில் இருந்தால் நிச்சயம் சேசிங் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், அணியின் ஸ்கோர் 239 ஆக இருந்தபோது இந்த பார்ட்னர்ஷிப்பை முகமது சிராஜ் உடைத்தார்.

அவரது ஓவரில் சான்ட்னர் (57) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹென்றி ஷிப்லே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 49வது ஓவரில் பெர்குசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 20 ரன் தேவை என்ற நிலையில் ஆட்டம் மேலும் பரபரப்பானது. சிக்சர்களாக விளாசி இந்திய பவுலர்களை திணறடித்த மைக்கேல் பிரேஸ்வெல் அந்த ஓவரை எதிர்கொண்டார். ஷர்துல் தாக்கூர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் பிரேஸ்வெல். அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. அதற்கு அடுத்த பந்தில் பிரேஸ்வெல் எல்.பி.டபுள்யூ. ஆனார். கடைசி வரை போராடிய பிரேஸ்வெல் 140 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்ம  வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

349 ரன்கள் குவித்த நிலையிலும், வெற்றிக்கு இந்திய அணி திணறியது.  கடைசி ஓவரில்  பிரேஸ்வெல் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் வெற்றி திசை திரும்பி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *