வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் சட்டமன்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி அக்டோபர் 28ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஃபெமினா ஹோட்டலில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 20 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் சட்டமன்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி வரும் அக்டோபர் 28ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் தரக்குறைவாகவும், இஸ்லாமிய வெறுப்புணர்வுடன் பேசியதோடு, எம்பி கனிமொழி பேசுவதற்கும் இடையூறாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை நீக்கம் செய்ய வேண்டும். அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
நீட் தேர்வுக்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சாதாரண மக்கள் மருத்துவராக ஆக முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் கடைசி வரைக்கும் மர்மமாகவே இருந்தது. இறுதியில் 10 ஆண்டுகள் கழித்து 2034 ஆம் ஆண்டு சாத்தியப்படக்கூடிய மகளிருக்கான் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவின் தோளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை இறக்கும் தைரியம் அக்கட்சியினருக்கு இல்லை. அதனால் பாரதிய ஜனதாவுக்கு அதிமுக அடிமைப்பட்ட கட்சியாகவே உள்ளது. குறைந்தபட்சம் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகம் முறைகேடான செயலாகும். இதன் மூலம் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இது சாத்தியப்படாத ஒன்றாகும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மேற்கு மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.