சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (23) என்ற வாலிபருக்கு அழைப்பு சென்றுவிட்டது. பின்னர் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக இருவரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில், சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஐயப்பன் திடீரென அந்த மாணவியை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ஐயப்பன் மாணவி தினமும் பட்டாபிராமிலிருந்து பட்டரவாக்கம் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரிக்கு வந்து செல்வதை அறிந்து கொண்டு பின்தொடர்ந்து வந்த ஐயப்பன் வெங்கடாபுரம் அருகே வரும் போது திடீரென தான் மறைத்து வைத்து இந்த பீர் பாட்டிலை உடைத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்தியதில் மாணவி ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.இதனை பார்த்த பொது மக்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்ககா சேர்த்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பண்ருட்டியை சேரந்த ஐயப்பன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டினில் பணிபுரிந்து வருவதும், மாணவி தன்னை காதலிக்க மறுத்ததால் கோபத்தில் பீர் பாட்டிலால் குத்தியதும் தெரியவந்தது. நடுரோட்டில் வைத்து நர்சிங் மாணவியை வாலிபர் ஒருவர் பீர்பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.