நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை. மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவைரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.
8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.