திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற மாற்றுப்பெயரில் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலி மாவட்ட அளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்தில் செல்வகுமாரும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி தூத்துக்குடியிலும், 12-ம் தேதி கன்னியாகுமரியிலும், 13-ம் தேதி தென்காசியிலும், 14-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திலும் சீமானுடன் செல்வக்குமார் பங்கேற்ற படங்கள் தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டது. நேற்றைய தினம் தாசில்தார் செல்வக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.