ஈரோட்டில் நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு வருகிறதா? தமிழ்த்தாய் வாழ்த்தில் இரு வார்த்தைகளை தூக்கியதற்கு இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள். ஆனால் அந்த பாடலில் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யார்?. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள். திராவிடம் என்ற வார்த்தை எதை குறிக்கிறது. திடீரென்று இவ்வளவு கோபப்படுகிறீர்களே? திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை தருவார்கள்? 3 தலைமுறையாக தமிழ் எழுத படிக்க முடியாத தலைமுறையை உருவாக்கியதை தவிர, தெருவிற்கு இரண்டு மதுபானக் கடைகளை திறந்ததை தவிர திராவிடர்களின் சாதனையை சொல்ல முடியுமா? அனைத்து உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றிபேசுகிறார்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கின்றனர்.சென்னையில் மழை நீரை வடிக்க முடியவில்லை. மக்கள் கொந்தளிக்கின்றனர். இதை திசைதிருப்ப திராவிடம் பிரச்னையை கிளப்புகின்றனர். இந்தியை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திணித்தது திராவிட ஆட்சி. முதலில் இந்தியை திணித்தார்கள். பிறகு இந்திக்காரர்களை திணித்தார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் எந்த உடன்பாடும் இல்லை. திராவிடம் என்ற சொல் தமிழ் கிடையாது. மாடல் என்ற சொல்லும் தமிழ் கிடையாது. பிறகு திராவிட மாடலில் எப்படி தமிழ் வாழும். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம்..இவ்வாறு சீமான் கூறினார்.