கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்தனர்.
மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்து, தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்க வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு 670 மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு 420 மீட்டர் தூரம் முதல்கட்டமாக சாலை அமைக்கப்பட்டது.
இந்த தார்சாலை மிகவும் தரமற்றதாக அமைக்கப்பட்டது. புதிய தார்சாலையை தோசையை புரட்டுவது போல மக்கள் புரட்டி எடுத்து விட்டனர். புதிய சாலை ஏடு ஏடாக கிளம்பி விட்டது. இந்த சாலையில் டூவீலர் வேகமாக சென்றால் கூட ரோடு தரையில் அமுங்கி பள்ளமாகி விடுகிறது. கனரக வாகனம் சென்றால் ரோடு முழுவதும் வாகனங்களின் டயர்களில் ஒட்டிக்கொள்ளும் நிலையில் காணப்படுகிறது.
இந்த சாலையை பார்த்த அந்த பகுதி மக்கள் கொதித்து போய் உள்ளனர். மக்கள் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்ததாரரை அழைத்து வந்து இந்த தார்சாலையை பார்க்க செய்து மீண்டும் புதிய சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் . 40 ஆண்டுகளாக இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். இப்போது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் எங்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 25 லட்சம் மதிப்பில் 670 மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கினார். ஆனால் ஒப்பந்ததாரர் சாலையை தரமாக அமைக்காமல் மக்கள் பணத்தை வீணடித்து உள்ளார். எனவே மீண்டும் புதிய சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.