தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நாட்டின் பிரதான மழைபொழிவுக்கு வகை செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த வாரம் விடைபெற்றுவிடும். அதன்பிறகு காற்று திசை மாற்றம் காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும். வடமாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும். இருப்பினும், மாநிலத்தின் மத்திய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரள மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகள் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும். அக்டோபர் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.