மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களும் இந்த சோதனை சாவடியை கடந்து கர்நாடக மாநிலம் செல்கின்றன.
இங்குள்ள சோதனை சாவடியில் மலிவு விலையில் மது , கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் போலீசாரின் வாகன சோதனைகள் அடிக்கடி சிக்குகின்றன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்தது. அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது போதையில் இருந்த வட மாநிலத்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சுகனேஸ்வரன், செந்தில்குமார் இரண்டு காவலர்கள் காயம் அடைந்தனர். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போலீசாருக்கு ஆதரவாக வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான கொளத்தூர் போலீஸ் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.