விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இங்கு திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.
இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுவதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரராக மாவட்ட வழங்கல் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.மனுவை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிர வாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று சுயேச்சைகள், தேர்தல் மன்னர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.