வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்.பி. கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். முதலில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்ய ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆனால் வேட்பாளர் அங்கு இல்லை. எனவே ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் வெளியே வந்து விட்டனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் தேர்தல் அலுவலகத்துக்குள் வந்து விட்டனர். அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய முயன்றபோது, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் அங்கு வந்து முதலில் வந்தது நாங்கள் தான் எனவே எங்களுக்கு தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதே நேரத்தில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் அங்கிருந்த வெளியே செல்ல மறுத்து எங்கள் மனுவைத்தான் முதலில் ஏற்கவேண்டும் என்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இரு கட்சி தொண்டர்களும் திரண்டனர். கடைகளும் அடைக்கப்பட்டன.
இதனால் சுமார் 2மணி நேரம் எந்த வேட்புமனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதன் பிறகு தேர்தல் அதிகாாி அதிமுகவின் வேட்புமனு தான் முதலில் தாக்கல் செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக வேட்பாளர் முதலிலும், திமுக வேட்பாளர் 2வதும் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிறிது நேரத்தில் வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபு உதயசூரியன் தான் வெற்றி பெற்றது. நாங்கள் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தோம் என்றார்.
இதற்கிடையே தாங்கள் வேட்புமனு செய்ய வழியில்லாமல் 2 மணி நேரம் காத்திருப்பதாக கூறி பாஜக வேட்பாளர் பால் கனகராஜூம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வடசென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவகத்தை சுற்றி 3 மணி நேரம் பதற்றம் காணப்பட்டது.