தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிமாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73,வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய இயலாததால், அதை ஆய்வு செய்த பிறகே ஏற்க வேண்டும் என எதிர்தரப்பினர் கூறினர்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பிரமாண பத்திரம் பெற்ற நோட்டரி பப்ளிக்கின் உரிமம் ஏற்கெனவே காலாவதி ஆகிவிட்டது என்று பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் வலியுறுத்தினார். ஆனாலும், உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரது மனுக்களும் ஏற்கப்பட்டன. ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதே பெயரில் உள்ள 5 பேர் என6 சுயேச்சைகளின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டு, 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கரூரில் அதிகபட்சமாக 56 மனுக்கள், தென்சென்னையில் 53 மனுக்கள், வடசென்னையில் 49 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக நாகை(தனி ) தொகுதியில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.