2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அக்கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜ.க. 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்துள்ளதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிக தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி 5 சதவிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதால், அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை வழங்க முடியாது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..