Skip to content
Home » மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முக்கிய இடத்தை பெற்று உள்ளது.

தஞ்சை ரயில் நிலையத்தில் மேற்கூரை முழுமையாக அனைத்து இடங்களிலும் அமைக்கப்படவில்லை. இதனால் பகல் நேரத்தில் ரெயிலுக்காக காத்திருக்கக்கூடிய மக்களால் மேற்கூரை அமைக்கப்படாத இடங்களில் நிற்க முடியவில்லை. ஏனென்றால் வெயில் தாக்கம் இருப்பதால் அந்த இடத்தை விட்டு தள்ளி மேற்கூரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று நிற்கின்றனர். ரெயில் வரும்போது மீண்டும் வெயில் விழக்கூடிய இடத்திற்கு வந்து தான் தாங்கள் ஏறக்கூடிய பெட்டிகளை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மழை காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடையில் இடை, இடையே மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் மேற்கூரை இல்லாத காரணத்தினால் வெயில், மழையால் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் போதுமான அளவு அமைக்கப்பட்டு இருந்தாலும் மேற்கூரை இல்லாத காரணத்தினால் பகலில் பெரும்பாலான இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 1 மற்றும் 2-வது நடைமேடையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை முழுமை பெறும் வகையில் 3 மற்றும் 4, 5-வது நடைமேடையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *