அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில், அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. இதுவரை ஜெயங்கொண்டத்தில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 150 -க்கும் மேற்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை 15 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளோம். ஒரு வாகனத்தை பிடித்தால் அதற்கு 10 முதல் 15 பேர் சிபாரிசுக்காக தான் போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் இனி வழக்கு பதிந்து,
அபராதம் விதித்து அபராத தொகை வசூலிக்கப்படும், எந்த சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டும், காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட்டும் அணிய வேண்டும். ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடாது. சரக்கு வாகனங்களில் பயணிகள் பயணிக்கக் கூடாது. படிக்கட்டுகளில் மாணவர்கள் குழந்தைகள் பயணம் செய்யக்கூடாது. இரண்டு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது. மாவட்டம் முழுவதும் ஒரு மாதத்தில் சாலை விபத்தில் 10 முதல் 15 நபர்கள் உயிரிழப்பு நடந்ததை, தற்பொழுது ஐந்தாக குறைத்துள்ளோம். விபத்து நடைபெறாமல் தவிர்க்க இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். நாங்களும் ஒத்துழைப்பதாக பொதுமக்களும் உறுதிகளைத்து அவ்விடத்தில் இருந்து சென்றனர்.