மும்மொழிக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவினர் கூறி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாதது அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய வார்த்தைகள் தான் இவை. ஆனால் அந்த பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்பது தான் உண்மை.
நாடு முழுவதும் உள்ள 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆங்கிலம், இந்தி கட்டாய மொழிகளாகவும், 6 முதல் 8ம் வகுப்புகளில் அந்தந்த மாநில மொழிகள் விருப்ப பாடமாகவும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்பது ஆர்டிஐயில் அம்பலமாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தி ஆசிரியர்கள் 100 பேரும், சமஸ்கிருத ஆசியர்கள் 53 பேரும் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் ஒரே வகுப்பில் படிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழாசிரியர் நியமிக்கப்படுவார் என்ற நிலை உள்ளது.
நிதி பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையும் இல்லாத கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேண்டுமென்றே தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் கல்வியாளர்கள் மும்மொழி கொள்கையை ஆதரிப்பவரின் நோக்கம் இந்தி, மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பது தான் என்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன், மாண்டரின் போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை மேலும் 3வது மொழியாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்யும் நெருக்கடி உள்ளது.
மாணவர்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி தமிழ் மொழி கற்பிப்பதை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தவிர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மும்மொழி கொள்கைக்காக வாதிடுவோர் இனியாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனத்துக்கு குரல் கொடுப்பார்களா என்பதே தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.