நவம்பர் 7ம் தேதி மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அங்கு நவம்பர் 7-ந்ேததி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சோரம்தங்கா முதல்வராக இருக்கிறார். அவரது மிசோ தேசிய முன்னணி கட்சி, பா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளது. மத்தியில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.
ஆனால், மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி கிடையாது. தனித்து போட்டியிடுகின்றன.இதற்கிடையே, இம்மாதம் 30-ந்தேதி, பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மிசோரம் செல்கிறார். மமித் நகரில் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், பிரதமர் வரும்போது அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் சோரம்தங்கா அறிவித்துள்ளார்.
லண்டன் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் கட்சி முற்றிலும் எதிரானது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை. அதனால்தான், தேசிய ஜனநாயக கூட்டணியிலும், வடகிழக்கு ஜனநாயக கூட்டணியிலும் சேர்ந்தோம். மிசோரம் மாநில மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரை சேர்ந்த மெய்தி இன மக்கள், மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை எரித்தனர். அதனால் மிசோரம் மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர். இந்த நேரத்தில், பா.ஜனதாவுடன் அனுதாபம் கொள்வது எனது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகி விடும். எனவே, பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வரும்போது அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். அவர் தனியாக வந்து, தனியாக பிரசாரம் செய்வதுதான் நல்லது. அதுபோல், நானும் தனியாக பிரசாரம் செய்வேன் என்று அவர் கூறினார்.